Aug 6, 2021

இயக்குநர் எம்.சிவகுமார்

 தொகுப்பு : பூ. முருகவேள்

        பெரும்பாலான உலக மக்களை ஈர்க்கும் ஒரு மிகப்பெரிய ஊடகமாக உருவெடுத்துள்ள சினிமா ஒரு முக்கியமான கலை வடிவம் ஆகும். எப்படி ஒரு  ஓவியத்தையோ, இசையையோ ரசிப்பதற்கு, அது பற்றிய புரிதல் அவசியமோ, அதே போல் சினிமாவை ரசிப்பதற்கும், அதைப்பற்றிய ஆழமான, விரிவான புரிதல் தேவை. இந்தத் தேவையை உணர்ந்து கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக தன் சீரிய தொடர் உழைப்பின் மூலம் மக்களின் சினிமா உணர்வை வளர்த்தெடுக்கும் பணியில் தொடர்ந்து கொண்டு இருப்பவர்  எழுத்தாளர், இயக்குர் எம்.சிவகுமார் அவர்கள். தற்போது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக உள்ளார்.

இயக்குநர் சிவகுமார் சென்னை, சைதாப்பேட்டையில் 12.6.1958 இல் மோகனன் கனகாம்பாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மாந்தோப்பு பள்ளியில் உயர்நிலைக்கல்வியும், நந்தனம் கலைக் கல்லூரியில் இளங்கலை (கணக்கு) கல்வியையும் நிறைவு செய்தார். பிறகு சென்னை அடையாறில் உள்ள திரைப்படக் கல்லூரியில், திரைப்பட இயக்கம் மற்றும் கதை எழுதுதலில் முதுகலைப் பட்டயம் பெற்றார்.

அவருடைய மனைவி பெயர் இலட்சுமி. மகள் வினைதா சிவகுமார் பின்னனி பாடகி மற்றும் இசையமைப்பாளராக இருக்கிறார். மகன் விஷ்ணு சிவகுமார் முதுநிலைப் பட்டதாரி.

படிக்கும்போது தன்னை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் இணைத்துக்கொண்டு பிற்காலத்தில் அந்த சங்கத்தின் சென்னை மாவட்டத் தலைவராகப் பொறுப்பேற்று, அதில் தீவிர பணியாற்றினார்.

வாசிப்பு என்பது சிறுவயது முதல் இருந்தாலும் முதன் முதலில் 1978-இல் கணையாழி இதழுக்கு இவர் எழுதிய நட்சத்திரங்கள் என்ற சிறுகதையும், பிறகு 1979-இல் சிகரம் தழுக்கு இவர் எழுதிய ஒரு பிரதிநிதி உருவாக்கப் படுகிறான்என்ற சிறுகதையும் இவரை வாசிகர்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது.

இலக்கியத்தில் பயணித்த அதே வேளையில் அவருக்கு சினிமாவிலும் ஆர்வம் மிகுந்தது. 1980-இல் மிருணாள் சென்னின் “Views on Cinema” என்ற ஆங்கில புத்தகத்தை தமிழில் மொழிபெயர்த்தார். அதனை தொடர்ந்து பூனா  திரைப்பட ரசனை முகாமில் கலந்து கொண்டார். அதன் பின் அவருக்கு சினிமாதான் எல்லாமுமாக மாறிவிட்டது.  அப்போது அவர் அடையார் திரைப்படக்கல்லூரியில் சேர்ந்திருந்தார். கல்லூரியில் சேர்ந்த முதல் வாரத்திலேயே நூலகத்தில் “The Theory of the Film” என்ற ஒரு ஆங்கிலப் புத்தகம் அவரை வியக்க வைத்தது.  அந்த புத்தகத்தினை தமிழில் மொழிபெயர்ப்பு  செய்து சினிமா கோட்பாடுஎன்ற பெயரில் 1992-ல் வெளிவந்தது.

1996 ஆம் வருடம் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் அவருடைய முயற்சியில் உருவானதுதான் "சினிமா ஒரு அற்புத மொழி" என்னும் புத்தகம்.


    இதுவரை ஆவணப்படங்கள், குறும்படங்கள், விளம்பரப் படங்கள் என சுமார் 120 படங்களுக்கு மேல் இயக்கியும், தயாரித்தும் உள்ளார்.  சாஸ்த்திர கௌதகம் மற்றும் “Declining birth rate-Lessons from Kerala” ஆகிய இரண்டு ஆவணப்படங்களுக்கு கேரளா அரசின் விருதுகள் கிடைத்துள்ளன.

      “Pesticide trap, who is trapped? Pest or Peasant” மற்றும் “Nano Magic” என்ற இரண்டு ஆவணப்படங்களுக்கும் உலகப்புகழ் பெற்ற மும்பை சர்வதேச திரைப்படவிழாவில் திரையிடப்பட்ட.

            இவர் இயக்கிய பல அறிவியல் சார்ந்த ஆவணப்படங்களுக்கு மாநில அளவில் விருதுகள் கிடைத்துள்ளன. டோக்கியோ திரைப்படவிழாவிலும், மும்பை திரைப்பட விழாவிலும் இவருடைய படங்கள் திரையிடப்பட்டது இவர் படங்களுக்குக் கிடைத்த பெரிய அங்கீகாரம்.

        “The Sleeping Beauty and the Airplane” என்னும் சிறுகதையை மொழிபெயர்த்து அதனை முதன் முதலில் கணையாழியிலும், இரண்டாவது முறையாக செம்மலரிலும் வெளிவந்தது.

     1997-இல் ஜப்பான் பவுன்டேஷனால் திரைப்பட கல்வி சுற்றுலாவுக்கு இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட  பத்து நபர்களில் இவரும் ஒருவர் என்பது சிறப்பு.

      மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் 2012 இல் சர்வதே திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவில் தேர்வுக் குழு உறுப்பினராகவும், 2016 இல் தேசிய அளவில் திரைப்படங்களைத் தேர்வு செய்யும் தேர்வுக் குழு உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.

      எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனின் தூண்டுதலில் செம்மலர் இதழில் மூன்று ஆண்டுகளாக அவர் எழுதிய கட்டுரைகள்தான் "சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு" என்று  புத்தகமாக வெளிவந்தது.

    இவர் எல்.வி. பிரசாத், ஃபிலிம் அன்ட் டிவி அகெடெமியில்  திரைப்பட இயக்கம், திரைக்கதை அமைப்புக் குறித்து வகுப்புகள் எடுக்கும் பேராசிரியராகவும்,  2014 முதல் 2019 வரை அங்கு துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். இன்றும் லயோலா கல்லூரி மற்றும் போப்டாவில் (BOFTA  - Blue Ocean Film and Television Academy, Chennai ) வருகை தரு பேராசிரியராக பணியாற்றுகிறார்.

     2020 ஆம் ஆண்டில் Siva Spiels Cinema என்னும் யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து, அதில் உலக சினிமா, திரைப்பட இயக்கம் பற்றி பதிவுசெய்து வருகிறார்.

    சத்யஜித் ரே அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு தற்போது செம்மலரில் ஆறு பகுதிகளை கொண்ட குறுந்தொடர் ஒன்றினை ஜுன்-2021 இதழ் முதல் வெளிவந்து கொண்டு இருக்கிறது.

        இவருடைய தன்னிகரற்ற அயராத உழைப்பு மற்றும் பணிகளின் மூலம் திரைத்துறைக்கு பெரும் பங்களிப்பை செய்துள்ளார். இவர் எழுதிய புத்தகங்களை வாசிப்பதும், இவருடைய விரிவுரைகளைக்  கேட்பதும் ஒருவரின் திரைப்பட ரசனை உணர்வை மேம்படுத்தி அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

வெளிவந்துள்ள நூல்கள்

        1.       சினிமாஒரு பார்வை (மொழிபெயர்ப்பு)

        2.    சினிமா கோட்பாடு (மொழிபெயர்ப்பு)

        3.    சினிமா ஓர் அற்புத மொழி 

4      4.    சினிமாவின் இரண்டாம் நூற்றாண்டு 


இணைய இணைப்புகள்