Aug 4, 2021

எழுத்தாளர் நா.ஜெயராமன்

 தொகுப்பு- இரா.தினேஷ்பாபு

            உண்மையைத் தேடி வாசிப்பதும் அதை பொதுவெளியில் முன் வைத்து விவாதித்து தீர்வை கண்டு நடைமுறைப் படுத்துவதுமே சமூக முன்னேற்றத்திற்கான இலக்கியத்தின் பங்கு என்று கூறும் எழுத்தாளர் நா.ஜெயராமன் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் புத்தாம்புதூர் கிராமத்தில் 24.06.1955 அன்று பிறந்தார். இவருடைய பெற்றோருக்கு எட்டு குழந்தைகள். இவர் ஐந்தாவது நபர். தாயார் திருமதி.கண்ணாயி அம்மாள், தந்தையார் திரு.நாகையா. தந்தையார் நீதிமன்றத்தில் அமினாவாக பணிபுரிந்தவர். தாத்தாவின் "பறை"யை முக்கியமென பாதுகாத்து வருகிறார். சாதி மறுப்பு மணம் புரிந்தவர். இணையர் மணிமேகலை. இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.

            புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள காந்திநகர் நகராட்சி பள்ளியில் தொடக்கக்கல்வியையும், பிரகதாம்பாள் பள்ளியில் உயர்கல்வியையும், மன்னர் கல்லூரியில் பட்டப்படிப்பும்,  சென்னை மருத்துவக்கல்லூரியில் பல் மருத்துவப்படிப்பும் படித்தார். பால்ய பருவத்தில் கிராமப்புற வாழ்க்கையிலும், வாலிப பருவத்தில் நகர்ப்புற வாழ்க்கையிலும் விதவிதமான சாதி ரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டவர். சாதீய ஒடுக்குமுறைக்கெதிரான தன் ஆதங்கத்தை சரியான வழியில் செயல்படுத்த வரலாற்று உண்மைகளை வெளிக்கொணர வேண்டுமென்றும், அதற்கு வாசிப்பே அடிப்படை என்ற புரிதலும் கொண்டவர்.

            சக மருத்துவ மாணவர்களான டாக்டர். ஜெயவேல், டாக்டர். குகாநந்தம், டாக்டர் பாலுச்சாமி போன்றோர்களின் நட்பு மேலும் தலித்திய சிந்தனைகளை வளர்த்தெடுத்தது. தலித்திய சிந்தனை பெரியாரையும், அம்பேத்கரையும் அறிந்துகொள்ள செய்தது. இவருக்கு மார்க்சிய சிந்தனைகள் தோன்றக் காரணமானவர் திராவிட மக்கள் இயக்கத்தின் திரு.சதாசிவம் அவர்கள். மருத்துவக்கல்லூரியில் பயிலும் போதே தலித்திய இயக்கங்களில் தன் பங்கேற்பை வழங்கியுள்ளார். 1975 இல் சத்தியவாணி முத்து அம்மையார் தொடங்கிய "தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகத்தில்" பணியாற்றியுள்ளார். 1979 இல் சென்னையில் நடைபெற்ற அகில இந்திய எஸ்.சி./எஸ்.டி. மாணவர் மாநாட்டில் பங்கேற்றுள்ளார். அவ்வாண்டிலேயே தாழ்த்தப்பட்ட மக்களுக்காக புத்தக வங்கி தொடங்க, இசை நிகழ்ச்சி நடத்தி நிதி திரட்டுவதிலும் தன் பங்கினை செலுத்தியுள்ளார்.

            "காந்தியின் தீண்டாமை" என்பது இவரின் முதல் நூலாகும். அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகளால் கவரப்பட்ட இவர் அம்பேத்கரை முழுமையாக அறிந்துகொள்ள வேண்டுமெனில் காந்தியடிகளை புறக்கணித்து விட்டு, அறிந்து கொள்ள முடியாது என்பதை உணர்ந்து காந்தி தொடர்பான அனைத்து புத்தகங்களையும் தேடித்தேடி வாசித்தார். அதன்பிறகு ஏ.பி.வள்ளிநாயகம் என்பவரின் தூண்டுகோலால் முதல் புத்தகத்தை எழுதி வெளியிட்டார். இது பெரும் விவாதத்தை கண்ட போதும் மறுப்பைக் காண இயலவில்லை, காரணம் உண்மைக்காக இவர் முன் வைக்கும் வரலாற்று ஆவணங்களே ஆகும்.

            ஒரு மருத்துவராக தன் பணிகளைத் திறம்படச் செய்துவரும் இவர் தற்போது யாரையும் இனி பல் மருத்துவம் படிக்க வேண்டாமென அறிவுறுத்துகிறார். அதனடிப்படையில் "பல் மருத்துவமா படிக்கப் போகின்றீர்கள்?" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். தேவைக்கு அதிகமான பல் மருத்துவர்கள் ஏற்கனவே சமூகத்தில் இருக்கையில் மீண்டும் மீண்டும் பல் மருத்துவர்கள் உருவாவது வேலை இன்மையையே உருவாக்கும் என்பது இவரின் தெளிவான புரிதல்.

            இவர் எழுதிய புத்தகங்களில் இன்றளவும் வாசிப்பு சமூகத்தால் பேசப்படும் மற்றுமொரு வரலாற்று ஆவண புத்தகம் "ஆஷ் படுகொலை புனைவும் வரலாறும்" என்பதாகும். கலெக்டர் ஆஷ் துரையின் படுகொலையில் பாரதியாரும், வ.வே.சு.ஐயரும் தொடர்பு படுத்தப்படாமல் இருப்பது குறித்து இந்நூல் பெரும் விவாதத்தை உருவாக்கிய போதும், எதிர்ப்பை பதிவு செய்ய இயலாதபடி ஆதாரங்களை முன்வைக்கிறது.

            "என் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்னை ஏமாற்றிவிட்டனர்" என்ற அம்பேத்கரின் சொற்பொழிவை மையமாகக் கொண்டு இவர் எழுதிய புத்தகம் "மேட்டுக்குடி தலித்துகளுக்கு" என்பதாகும். காலந்தோறும் கல்வி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அண்ணலின் பெரும் பங்களிப்பின் மூலம் இக்காலத்தில் கல்வி ஓரளவிற்கு கிடைக்கும் நிலையில் கல்வி பெற்ற தலித்திய மக்களில் சிலர் அதை மற்றவர்களுக்கு வழங்குவதில்லை என்பதும் தலித்திய மக்களின் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பதை இந்நூல் மூலம் முன்வைக்கிறார்.

            தமுஎகசவில் இணையும் முன்னரே அவ்வமைப்பின் நிகழ்வுகளில் சிறப்புரை ஆற்றியிருக்கும் இவர் ராசி பன்னீர் செல்வம், நா.முத்துநிலவன், ஆதவன் தீட்சண்யா, தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளுடன் தோழமை பாராட்டியுள்ளார். பிறகு தன்னையும் தமுஎகசவில் உறுப்பினராக இணைத்துக்கொண்டார். சமூக சமத்துவத்திற்கு அண்ணல் அம்பேத்கர் வழிவகுத்த பௌத்தத்தை கடைபிடித்து வரும் இவர் அம்பேத்கர், பெரியார், கார்ல்மார்க்ஸ் (அ.பெ.கா.) பண்பாட்டு மையத்தின் நிறுவனராகவும் தலைவராகவும் சமூக பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

வெளிவந்துள்ள நூல்கள்

1. காந்தியின் தீண்டாமை

2. பௌத்தம் ஓர் அறிமுகம்

3. குலதெய்வ வழிபாடு தலித்தியத்தை எதிரொலிக்கவில்லை (இவருடைய நேர்காணல் நூல்)

4. மகனுக்கு மடல்

5. நான் ஏன் பதவி விலகினேன் (அம்பேத்கரின் பாராளுமன்ற உரைகள்)

6. புகையிலை மற்றும் வாய்சுகாதாரம் (லண்டன் தமிழ்ச்சங்கத்தில் ஆற்றிய உரை)

7. அம்பேத்கர் இந்து வயப்படுத்த முடியாத தத்துவம்

8. இந்து வேதங்கள் அறநெறிப்பண்பு கொண்டவையா?

9. மேட்டுக்குடி தலித்துகளுக்கு

விருதுகளும், பரிசுகளும்

1. 2013 இல் புதிய குரல் வழங்கிய "சாதனைத்தமிழர்" விருது.

2. 2018-2019 ஆம் ஆண்டிற்கான "அயோத்திதாசர்" விருது.

3.  திராவிடர் கழகம் வழங்கிய "பெரியார்" விருது.

4. இந்தியக் குடியரசு கட்சியின் தமிழ் மாநிலக்குழு வழங்கிய "தாத்தா ரெட்டைமலை சீனிவாசன்" விருது.

5. டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை சார்பில் வெள்ளிவிழா ஆண்டிற்கான விருது.

6. தியாகி இமானுவேல் பேரவை சார்பில் அரசியல் எழுச்சி மாநாட்டிற்கான விருது

இணைய இணைப்புகள்