Sep 21, 2021

எழுத்தாளர் எஸ். வி. வேணுகோபாலன்

 தொகுப்பு : சி.பி.மல்லிகா பத்மினி

            எழுத்தாளர் எஸ். வி. வேணுகோபாலன் 1959-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் எஸ்.ஆர். வரதாச்சாரி - சுகந்தா தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். பூர்வீகம் காஞ்சிபுரம் மாவட்டம். இரண்டரை வயதில் தாயை இழந்தார். தாயின் முகத்தை அறியாத சோகம் இவருக்குள் உண்டு. தந்தை அண்மையில் 90-ஆவது வயதில் காலமானார். இவரது இணையர் ராஜேஸ்வரி தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். அவர் சிறந்த சமூக செயல்பாட்டாளர். இவர்கள் சடங்கு மறுப்பு திருமணம் செய்து கொண்டனர். கட்டிடக்கலை (Archaeology) பட்டதாரியும், திறமையான ஓவியருமான மூத்த மகள் இந்து திருமணமானவர். மகன் நந்தா கல்லூரி மாணவர்.

            தோழர் எஸ்.வி.வி. இந்தியன் வங்கியில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து, 2019 டிசம்பரில் ஓய்வு பெற்றார். இவர் புத்தகம் பேசுது மாத இதழின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளார்.

            தோழர் எஸ்விவி யின் பணிகள் ஆச்சரியமூட்டுவதாக உள்ளன. மனிதர், இடைவிடாது பலப்பல பரிமாணங்களில் இயங்கிக் கொண்டே இருப்பவர். எழுத்தாளர் என்றால் அதற்குள்.. கதை, கட்டுரை, கவிதை, புத்தக அறிமுகம், இதழாசிரியர் பணி, பாராட்டுக் கடிதம், நூல்கள், கட்டுரைகள், குறிப்பாக குழந்தைகளை கொண்டாடும் கட்டுரைகள் என பலப்பல பரிமாணங்களில் பரிமளிக்கின்றார். மேலும், மேடைப் பேச்சாளர், தொழிற்சங்க செயல்பாட்டாளர் மற்றும் கதைசொல்லி என தேனீ போல் சுறுசுறுப்பாக இயங்குபவர். வெகுவேகமாக வாசிக்கும் திறன் பெற்ற இவர், அடுத்தவரின் எழுத்தை கொண்டாடுவதில் பேரானந்தம் அடையும் பண்பாளர்.

            இளவயதில் இருந்தே இலக்கிய ஆர்வம் உண்டு. இவரது தாய்வழி பாட்டனார் இராஜகோபாலாச்சாரியார் வேலூரில் உள்ள பள்ளியில் தலைமை ஆசிரியராகத் திகழ்ந்தவர்; நிறைய வாசிப்பவர். தாயை இழந்த எஸ்விவி, தாத்தாவின் நிழலில் வளர்ந்ததில் வாசிப்பு நாட்டம் தொற்றிக்கொண்டது. இவரது அண்ணன் தான் நூலக அறிமுகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

            தமது பதினோரவது வயதிலிருந்தே பேச்சுப்போட்டி, மேடை நாடக நடிப்பு, கவிதை எழுதுதல் என்று திறமை காட்டியவர், பள்ளிப் படிப்பு முடியும் வரை இலக்கியப் போட்டிகளில் தொடர்ந்து பல பரிசுகளை தட்டிச் சென்றுள்ளார். பள்ளி தமிழாசிரியர்கள் தொடர்ந்து இவரை ஊக்கப் படுத்தியுள்ளனர். கல்லூரி வந்த பின்பும் எழுத்து மற்றும் பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் குவிப்பது தொடர்ந்தது. 

            மகாகவி பாரதியின் பாடல்களில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், ஏ.எம்.ஜெயின் கல்லூரியில் பாரதி பிறந்தநாள் விழாவினை வெகு விமரிசையாக நடத்தியுள்ளார்.

            எழுத்தாளர் அழகியசிங்கரின் அறிமுகம் வாய்க்க, அவரோடு இணைந்து கையெழுத்து பத்திரிகை நடத்தியுள்ளார். அதில் நிறைய கவிதைகள், சிறுகதைகள் எழுதியுள்ளார்.

             1977 இல் 'ஆனந்த விகடன்' இதழின் மாணவர் பக்கத்திற்கான போட்டியில் இவரின் 'ஷா கமிஷன்' எனும் சிறுகதை தேர்வு செய்யப்பட்டு பிரசுரம் ஆனது. 'கணையாழி'யில் ஒரு சிறுகதை அதே காலத்தில் வந்தது. 

            இந்தியன் வங்கியில் சேர்ந்தபின் தொழிற்சங்கப் பணியில் மிகவும் தீவிரமாக இயங்கிய போதிலும், வாசிப்பு ஒரு பக்கமும், கட்டுரைகள் எழுதுவது ஒரு பக்கமும் தொடரவே செய்தன. வங்கி ஊழியர் இதழான பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிட்டி மாத இதழின் பொறுப்பாசிரியராக இருந்து முக்கிய பங்காற்றியுள்ளார்.

            தோழர் எஸ்.வி.வி.யின் நெருங்கிய நண்பரான ஓமியோபதி மருத்துவ நிபுணர் பி.வி. வெங்கட்ராமன் அவர்களுடைய மருத்துவக் குறிப்புகளை வைத்து இவர் எழுதிய கட்டுரைகள் பெரிய வரவேற்பு பெறவே, "நலம் நலம் அறிய ஆவல்" எனும் முதல் புத்தக ஆக்கம், 2005 உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. அதையடுத்துமேலும் மூன்று உடல்நலக் கட்டுரை தொகுப்புகள்  வெளிவந்தன.

            அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு விஷயங்கள் மீதான நிறைய கட்டுரைகள் தீக்கதிர், செம்மலர், தினமணி, தி இந்து தமிழ் போன்ற இதழ்களில் வெளியாகியுள்ளன. தி இந்து டாக்கீஸ் இணைப்பில் திரைக் கலைஞர்கள், இசைப் பாடகர்கள், பாடல் ஆசிரியர்கள் குறித்த கட்டுரைகள் வெளிவந்துள்ளன. புத்தக வாசிப்பு, கல்வி, குழந்தைகள் குறித்த கட்டுரைகள், தி இந்து தமிழ் நாளிதழில் நடுப்பக்கக் கட்டுரைகளாக வெளியாகி உள்ளன. 

            பல்வேறு பத்திரிகைகளில் வெளியான சிறுகதைகளின் முதல் தொகுப்பு, இவர் வங்கிப்பணி நிறைவு செய்த 2019 டிசம்பர் மாதம், கீழ் வெண்மணி நாளில் 'தர்ப்பண சுந்தரி' எனும் பெயரில் நீதியரசர் கே.சந்துரு அவர்களால் வெளியிடப்பட்டது. அதே நிகழ்வில், 'உதிர்ந்தும் உதிராத' எனும் தொகுப்பை மார்க்சிஸ்ட் கட்சியின் தோழர் ஜி. செல்வா வெளியிட்டார். அந்த நூல், முக்கிய ஆளுமைகள் மறைவின்போது எஸ்விவி எழுதி, பல்வேறு இதழ்களில் வெளியான புகழஞ்சலி கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்.

            குழந்தை கல்வி வல்லுநர் பேராசிரியர் ச. மாடசாமி அவர்கள், எஸ்விவி யின் "தர்ப்பண சுந்தரி" சிறுகதை தொகுப்பு நூலினை சிலாகித்து அறிமுகம் செய்து எழுதிய வரிகளில் சில.. 

"அம்மாவின் புளிக் குழம்பில் மிதக்கும் பிரியம் போல (அம்மாவின் மகன்) ஒவ்வொரு கதையிலும் ஒரு பிரியம் மிதந்து கொண்டிருக்கிறது. தோழர் எஸ்.வி.வி. யின் பிரியம்! சில கதைகளில் பிரியம் வெள்ளமாய் கரைந்தோடுகிறது- குறிப்பாக மரணங்களை சொல்லும் கதைகளில்."

கதைகள் பேசும் பேச்சு கம்மி; மனப்பேச்சுக்களைத் தூண்டுவது தான் அதிகம்"

"எ.ஸ்.வி.வி. யின் செல்ல மகள் இந்து வரைந்த அட்டை ஓவியம் மிக அருமை. எஸ்.வி.வி. யின் பிரியம் இன்னும் பல தொகுப்புகளாய் வளர வேண்டும்."

            கவிதைகளை பொறுத்தவரை, ஆனந்த விகடனின் சொல் வனம் பக்கங்களில், தி இந்து தமிழ் நாளிதழின் தேநீர்ப் பகுதியில், செம்மலர், வண்ணக்கதிர், தீக்கதிர், கணையாழி, மலர்த்தும்பி, நவீன விருட்சம் உள்ளிட்ட இதழ்களில் வெளியாகியுள்ளன. 

            ஆங்கில இந்து நாளிதழின் ஓபன் பேஜ் பக்கங்களிலும, பேங்க் ஒர்க்கர்ஸ் ஃபோரம் எனும் கேரள வங்கி ஊழியர் மாத இதழிலும் ஆங்கில கட்டுரைகளும், கவிதைகளும் வெளிவந்துள்ளன. 

            கொரோனா ஊரடங்கு காலத்தில் பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணையதளத்தில் 'இசை வாழ்க்கை' எனும் தொடர் 50 வாரங்களை தாண்டி வெளிவந்து கொண்டிருக்கிறது. புத்தகம் பேசுது இதழில் வாசிப்பு ரசனை, குவிகம் மின்னிதழில் திரை ரசனை, புதிய ஆசிரியன் இதழில் உறவுகள் தொடர்கதை என்று மொத்தம் மூன்று தொடர்கள் வந்து கொண்டிருக்கின்றன.

            இந்தியன் வங்கி ஊழியர் அசோசியேஷன் (தமிழ்நாடு) தொழிற்சங்கத்தில் துணை பொதுச்செயலாளராகவும், அகில இந்திய சம்மேளனத்தின் செயலாளராகவும் பல ஆண்டுகள் செயல்பட்டுள்ளார்.

            வங்கி அரங்க முற்போக்கு ஊழியர் அமைப்பின் செயலாளராக, சமூக செயல்பாட்டாளராகவும் இயங்கி வருகிறார். இதுவரை இவரது ஏழு நூல்கள் வெளி வந்துள்ளன.

 வெவ்வேறு பத்திரிக்கைகளில் வெளிவந்த, தொகுக்க வேண்டிய கட்டுரைகள் ஏராளம். 500-க்கும் அதிகமாக. இதில் புதிய ஆசிரியன் இதழில் 11 ஆண்டுகளாக வெளிவந்த கட்டுரைகள் மட்டுமே 125-க்கும் அதிகமானவை. THE HINDU / BANK WORKERS FORUM இரண்டிலும் வந்திருக்கும் 25 ஆங்கிலக் கட்டுரைகளும் தொகுக்க வேண்டியுள்ளது.

இதுவரை வெளிவந்துள்ள நூல்கள்

1)நலம் நலம் அறிய ஆவல்- 2005

2) உடலும் உள்ளமும் நலம்தானா - 2009

3) எல்லோரும் நலமுற்றிருக்க - 2014

4)உடலும் உள்ளமும் கொண்டாடும் இடத்திலே - 2015

5)இசைத்தட்டாக சுழலட்டும் வாழ்க்கை - 2019 

 6)தர்ப்பண சுந்தரி- 2019

7) உதிர்ந்தும் உதிராத - 2019 

பெற்ற பரிசுகள்

1) 'கடைசி நாள் படுக்கை' எனும் சிறுகதைக்காக, 2009 கந்தர்வன் நினைவு சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றுள்ளார்.

2) சின்னக்குத்தூசி நினைவு கட்டுரைப் போட்டியில் பொருளாதார பிரிவுக்கான சிறந்த கட்டுரையாளராக 2015-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டு ரூபாய் 10 ஆயிரம் பரிசு பெற்றுள்ளார்.  

இணைய இணைப்புகள்