Sep 30, 2021

எழுத்தாளர் போப்பு

தொகுப்பு : ராதிகா விஜய்பாபு

            உடல் சார்ந்தும் உணவு சார்ந்தும் பல உண்மைகளை உணர்ந்து கற்றுக்கொண்டு வாழ்க்கையில் கடைப்பிடிப்பது மட்டுமல்லாமல் அந்தத் தகவல் அனைவரையும் சென்றடைந்து பயன் பெறும் வகையில் உடல் குறித்தும், உணவு குறித்தும், பல நூல்களைப் படைத்தும் மொழிபெயர்த்தும் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் எழுத்தாளராக போப்பு உள்ளார்.

            எழுத்தாளர் போப்பு அவர்களின் இயற்பெயர் போ.புருஷோத்தமன்.

            விருதுநகர் மாவட்டம் கோவிலாங்குளம் எனும் ஊரில் போத்திராஜ் பால நாகம்மாள் தபதியருக்கு 1960 ஆம் வருடம் மார்ச் மாதம் ஏழாம் தேதி போப்பு ஆறு குழந்தைகளில் முதல் குழந்தையாக பிறந்தார். சிறுவயது முதலே படிப்பின் மீது ஆர்வம் கொண்டவராக விளங்கினார். 12 வயது முதலே நூலகங்கள் வழியாக கதைகள், கவிதைகள், நாவல்கள் என படிக்கும் ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. தனது பதினைந்தாம் வயதில் முதல் கவிதையை படைத்து இருக்கிறார். மாணவப் பருவத்தில் சக மாணவனின் அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட கவிதைகள் மீது ஏற்பட்ட ஈர்ப்பு இலக்கிய உலகத்திற்கு அழைத்து வந்தது. அண்ணாவின் உரை, பாரதிதாசனின் கவிதைகள், பாரதியார் கவிதைகள், புதுமைப்பித்தன் என இவர் இலக்கிய ஆர்வத்திற்கு விருந்தாக அமைந்தார்கள்.

            இவர் மனைவியின் பெயர் அலமேலு. இவருக்கு  மீனா, துர்கா என்று இரண்டு மகள்கள், இருவருக்கும்  திருமணம் முடித்து பாண்டிச்சேரியில் வசிக்கிறார்கள்.

            கவிதை, கதைகள், மொழிபெயர்ப்புப் பணி, இயற்கை சார்ந்த உணவகம், அக்குபங்சர் மருத்துவம் என வேறுபட்ட அனுபவம் கொண்ட போப்பு அவர்கள் கோவிலாங்குளம் கிராமத்தில் தன் பள்ளிப்படிப்பை முடித்து மதுரையில் தன் தொழில் கல்வியை முடித்தார். கோவையில் 3 வருடம் எல் ஜி பி  இல் பணியாற்றினார்.   பின் ஓசூரில் உள்ள அசோக் லேலண்ட் இல் 15 ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்தக் காலகட்டத்தில் ஓசூர் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தொடர்பு ஏற்பட்டு கையெழுத்து பத்திரிக்கையால் கவிதை, கட்டுரை, கதை என எழுத ஆரம்பித்து பின் அப் பத்திரிகையின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார் அதன் பிறகு சிங்கப்பூருக்கு வேலை நிமித்தமாக சென்று பத்து ஆண்டுகள் அங்கு வாசம் செய்தார்.

            1990 ஆம் வருடம்  கருப்பு மை என்ற சிறுகதை முதல் முறை கல்கி இதழில் பிரசுரமானது . அதே ஆண்டு இவர் எழுதிய இரண்டாம் சிறுகதையான வேரில் துடிக்கும் உயிர்கள் என்ற கதை உரத்த சிந்தனை என்ற அமைப்பின் மூலம் அந்த ஆண்டின் சிறந்த சிறுகதை தேர்வு செய்யப்பட்டு செம்மலரில் வெளியானது.

        1993 இல் கூடுகளை விட்டு கவிதைத் தொகுப்பு வெளியானது, பின் நீண்ட இடைவேளைக்குப் பிறகு 2005ஆம் ஆண்டு நாளைக்கு மழை பெய்யும் சிறுகதைத் தொகுப்பு வெளியானது. 2010ல் புதுச்சேரிக்கு குடிபெயர்ந்து முழுநேர எழுத்தாளராக அரசியல், சுற்றுச்சூழல், நாவல் என இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பு செய்துள்ளார். மாற்றுமருத்துவம் உடல் மீதான ஈடுபாட்டின் பேரில் அக்குபங்சர் பயின்று தற்பொழுது பல நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகிறார்.

            ஆரோக்கியத்தைப் பற்றியும் ஆரோக்கிய உணவுகளை பற்றியும் பல கட்டுரைகள் படைத்ததோடு இல்லாமல் ஓசூரில் அமுது நல உணவு என்ற  ஆரோக்கியமான உணவு வகைகளை முன்னிறுத்திய உணவகத்தை நடத்தி வந்துள்ளார்.

            சில மொழிபெயர்ப்பு நூல்களை படித்து ஏற்பட்ட அதிருப்தியால் பட்டினி வயிறும் டப்பா உணவும் என்ற நூலை மாறும் உணவு கலாச்சாரமும் நோய்களும் என்ற உலக சுகாதார நிறுவன ஆய்வறிக்கையை மொழிபெயர்த்தார். இவரது மொழிபெயர்ப்பு கட்டுரைகள் இங்குள்ள மக்களை சென்றடையும் விதமாக  மொழிபெயர்ப்பாக மட்டும் இல்லாமல் மொழி பரிமாற்றமாக படைத்துள்ளது இவரது சிறப்பு.

          உடலுக்கு நன்மை பயக்கும் உணவு முறை குறித்து இந்து இதழில் உயிர் வளர்த்தேனே என்ற தலைப்பில் தொடர் கட்டுரை எழுதி வந்துள்ளார்.

            புதிய வாழ்வியல் இதழில் தொடர் கட்டுரை எழுதியுள்ளார். கட்டுரைத்தொகுப்பு உயிரே போற்றி உணர்வே போற்றி என்ற நூலாக வெளிவந்துள்ளது. உடல் நலனுக்கு ஏற்ற புதிய உணவு முறையை அறிமுகம் செய்யும் நம்ம சாப்பாட்டு புராணம் என்னும் இவரது நூல் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.தற்பொழுது மாலைமலர் பத்திரிக்கையில் கிச்சனில் பயன்படுத்தும் பொருட்களின் தன்மை பயன்பாடு பற்றிய கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கிறார்.

            நாடகம் எழுதுவது, மேடைப் பேச்சு, நாடகக் குழுவை நடத்துவது, சந்தியா பதிப்பகம், வம்சி பதிப்பகங்களில் நூல்கள் சரிபார்க்கும் வேலை என பல துறைகளிலும் தடம் பதித்துள்ளார்.

            தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் திருவண்ணாமலை கிளை வளர்ச்சிக்கு பவா செல்லதுரை ஆதவன் தீட்சண்யா மற்றும் கருப்பு கருணா ஆகியவர்களுடன் இணைந்து பங்காற்றியுள்ளார்.

            தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகித்துள்ளார். ஒரு வழிப்பறிக் கொள்ளையனின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற மொழிபெயர்ப்பு நாவலுக்காக தமிழின் சிறந்த மொழிபெயர்ப்புக்கான விருது கிடைத்துள்ளது.

வெளிவந்துள்ள நூல்கள்

    1.       கூடுகளை விட்டு - கவிதைத் தொகுப்பு

    2.       நாளைக்கு மழை பெய்யும் - சிறுகதைத் தொகுப்பு

    3.       நம்ம சாப்பாட்டுப் புராணம் - உணவியல் நூல்

    4.        என் உடல் என் மூலதனம் - உடலியல் நூல்

    5.        உணவுக்கு முதல் வணக்கம் - உணவியல் நூல்

    6.        உணவே போற்றி உயிரே போற்றி - உணவியல் நூல்

    7.       காயமே இது மெய்யடா - உடலியல் நூல்

    8.       நிலவைக் காட்டி அமுது ஊட்டி - உணவியல் நூல்

    9.       உயிர் வளர்த்தேனே - உணவியல் நூல்

    10.    கல் கிழவி - சிறுகதைத் தொகுப்பு

    11.    நிலம் - உணவு - நலம் உணவு, உடலியல்

மொழியாக்க நூல்கள்

    1.       பட்டினி வயிறும் டப்பா உணவும்

    2.       தடுப்பூசி வரலாற்று மோசடி

    3.       நோய்க்கு அஞ்சேல்

    4.       நுகர்வெனும் பெரும்பசி

    5.       எண்ணை மற மண்ணை நினை

    6.       முடையும் வாழ்வு

    7.       என்பெயர் டேவிட்

    8.       ஒரு வழிப்பறிக்கொள்ளையனின் ஒப்புதல் வாக்கு மூலம்

    9.       பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் 

பெற்றுள்ள விருதுகள்

* இலக்கியச் சிந்தனை நல்லி திசை எட்டும் மொழிபெயர்ப்புக்கான விருது

 *தமுஎகச வின் மொழி பெயர்ப்புக்கான விருது

இணைய இணைப்புகள்